Saturday, April 20, 2013

ஒரு செய்தியாளனாக என்னை உணர்ந்த நொடி.....


சென்னை ஐ.ஐ.டி.யில் ஆண்டு தோறும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பது வழக்கம். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளின் எண்ணிக்கை, வருகைப் பதிவு, பங்கேற்ற விவாதங்கள் ஆகிவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்த விருது பெறுபவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

அதேபோல் இந்த ஆண்டிற்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இராமசுப்பு உட்பட 4 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.இதனிடையே பார்வையாளர்களின் கேள்வி நேரம் வரும் போது அனைவரும் நாடாளுமன்றத்தில் நடந்தவை பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர், அப்போது எழுந்த நான் " எனது பெயர் பாரதி, புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் செய்தியாளன், இந்த கேள்வியை ஒரு செய்தியாளனாக கேட்கவில்லை... சக மனிதனாக கேட்கிறேன்.. அதை இராமசுப்புவிடம் கேட்க விரும்புவதாக சொல்லிவிட்டு இப்படி கேட்டேன்....

"கடந்த சில வருடங்களாக தமிழக மீனவர்கள் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இவை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்கும் போது இதுவரை ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.... உங்களுடைய நிலைப்பாடு என்ன" என கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அலறியடித்துக் கொண்டு மேடைக்குச் சென்று இது போன்ற கேள்விகளை இங்கு கேட்க கூடாது என்றனர். அதற்கு நான் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றவராகவும், தீர்வு கண்டவராகவும் இருக்க வேண்டும் இங்கு யார் அப்படி செய்து கொண்டிருக்கின்றனர்... நான் கேள்வி எழுப்ப வேண்டிய இடத்தில் இருக்கிறேன்..அவர் பதில் கூற வேண்டிய இடத்தில் இருக்கிறார் என்றேன். 

இதனை சற்றும் எதிர்பார்க்காத நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இராமசுப்பு என்ன பதில் சொல்வதென தெரியாமல் திரு திருவென விழித்தார். (ஏனென்றால் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவரான அவரது மாவட்டத்தில் 18 கிராமங்கள் மீனவ கிராமங்கள் ) இதற்கு என்னை வாழ்த்தும் விதமாக அங்கிருந்த IIT மாணவர்கள் கை தட்டி பாராட்டினர். இதனையடுத்து அலுவலகத்திலிருந்து எனக்கு தொலைபேசியில் அழைப்பு வரவும் வெளியே வந்துவிட்டேன்... 

இந்த நிகழ்ச்சி முடிந்ததை அடுத்து அனைவரும் எனக்கு கை கொடுத்துக் கொண்டிருக்கும் போது என்னை கடந்து சென்ற அந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்னை கட்டியணைத்து " நல்லா கேள்வி கேட்டீங்க தம்பி...." என்று சொல்லிவிட்டு எனது மற்ற கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டுச் சென்றார்.... இந்த நிகழ்வின் போது அங்கிருந்த எங்கள் திட்டமிடல் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் (Assignment Head) திரு.பிரேம் சங்கர் என்னிடம் " என்ன பாரதி.. கேட்டீங்க..எல்லாரும் உங்களுக்கு  கை கொடுக்குறாங்க... " என்று கேட்டார்..... 

இந்த நொடி ஒரு செய்தியாளனாக கர்வம் கொள்ள வைத்தது.... எனக்கும் சமூக பொறுப்பு உண்டு என்பதை மீண்டும் உணர்த்தியது..... இந்த வாய்ப்பினை வழங்கிய எங்களது செய்தித் தலைமை திரு.ஸ்ரீனிவாசன், தலைமைச் செய்தியாளர் பீர் முகமதுவுக்கு நன்றி....

-கிறுக்கன்...

1 comment: