தமிழகத்தில் மதுரை,
விருதுநகர், தேனி, திண்டுக்கல்,
சிவகங்கை மாவட்டங்களில் பயிரிடப்படும் மல்லிகைப்பூ,
மதுரை மல்லி என்றழைக்கப்படுகிறது.
சுண்டியிழுக்கும் மணமும்... கண்ணைப் பறிக்கும் வெண்மையும் இதன் அழகிற்கு மகுடம்.
மற்ற மல்லிகைப் பூக்களை விட மதுரை மல்லி மொட்டுக்கள் தாமதமாகவே விரியும் தன்மை கொண்டவை.
மனதை மயக்கும் ஆழ்ந்த நறுமணம் கொண்ட இவ்வகை பூக்கள் இன்றும் பெண்களின் விருப்பதேர்வாக உள்ளது.
இதனிடையே தானம் என்ற அறக்கட்டளை ஒன்று,
மதுரை வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மதுரை மல்லி விவசாயிகள் சங்கம் மூலமாக மதுரை மல்லிப் பூக்களுக்கு பதிவுரிமை கோரி சென்னையில் உள்ள புவியியல் அடையாள பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தது.
விளை பொருட்கள் பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் படி,
மதுரை மல்லிகையின் தொன்மை,
அதன் சிறப்புகள், அதனை சாகுபடி செய்யும் முறைகள் ஆகியவற்றை சமர்பித்ததன் மூலமாக மதுரை மல்லிக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.
உலகிலேயே முதல் முறையாக பதிவுரிமை மற்றும் பாதுகாப்புரிமை பெறும் முதல் மலர் என்ற பெருமையையும் மதுரை மல்லி பெற்றுள்ளது.