வணக்கம்
தோழமைகளே...
இதோ இன்றோடு முடிகிறது,
எனது ஊடகப் பணி.. திண்டுக்கல்
மாவட்டம் தருமத்துப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் நான். நான். 8 வது படிக்கும் போது
தொடங்கியது எனது முதல் செய்திப்
பணி, எங்களது கிராமத்தில் அவசர
கதியில் போடப்பட்ட சாலைகளையும் அதன் விளைவுகளையும் பற்றி நான் எழுதிய அந்த செய்தி
"தினமலரில்" வெளிவந்ததோடு, எனக்கு எனது வீட்டில்
தர்ம அடி விழுவதற்கு காரணமாக
அமைந்தது. ஆனால், அதற்குப் பின்
12 ஆம் வகுப்பு முடித்ததும், நான்
மேற்கொண்டு படிக்க முடியாத நிலை, அதனால் குடும்ப சூழல் கருதி
திண்டுக்கல்லில் இருந்த
ஒரு உள்ளூர் தொலைக்காட்சியில் வேலைக்கு
சேர்ந்தேன், எனக்கு கவிதையும், தமிழில்
பிழையின்றி எழுத தெரியும் என்பதற்காக
எனது குருநாதர் "தினமலர் திரு.ஹரிஹரன்" அவருக்கு
உதவியாளனாக வைத்துக் கொண்டார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக செய்தி என்றால்
என்ன என்பதை அறிந்து கொண்டு அங்கேயே உதவி செய்தி ஆசிரியராக ஓராண்டு பணிபுரிந்தேன்.
இருந்தாலும் எனக்கு
இயற்பியல் படிக்க வேண்டும் என்பது விருப்பம். எனவே பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர்
கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப்படிப்பாக இயற்பியலை தேர்வு
செய்து படித்துக் கொண்டிருந்தேன், ஆனால் ஊடகத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தினால் பழனியில்
உள்ள உள்ளூர் தொலைக்காட்சியில் நானே செய்தியாளராக சேர்ந்து, வாரத்திற்கு ஒரு முறை
ஒரு மணி நேரத்திற்கு செய்திகளை வழங்கி வந்தேன், எனது குடும்பத்தோடு, அதிகம் நெருக்கமில்லாத
நாட்களான அப்போது தீபாவளி, பொங்கலுக்கு கூட வீட்டிற்குச் செல்லாமல், கல்லூரி விடுதி,
செவன்த் சேனல் என்று கரைந்து கொண்டிருந்த எனக்கு பாலிமர் தொலைக்காட்சியின் பகுதி
நேர செய்தியாளனாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
நானே சம்பாதித்து,
நானே சமைத்து, என்னை நானே வளர்த்துக் கொண்டிருக்கும் வேளையில் கல்லூரி இறுதியாண்டும்
முடிந்த பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை, இறுதியில் பாலிமர் தொலைக்காட்சியின்
செய்தி ஆசிரியர் திரு.கே.செல்வராஜிடம் சாரிடம் இருந்து அழைப்பு “ சென்னைக்கு வா “ என்று.
இங்கும் செய்தியாளன்தான் என்று கிளம்பி வந்த எனக்கு கிடைத்தது என்னவோ, தொலைக்காட்சி
ஒளிபரப்பு பிரிவு பொறியியலாளர் (Broadcasting Engineer) பணி. சரி பரவாயில்லை என்று
அங்கே ஒரு ஆண்டு பணிபுரிந்துவிட்டு சத்தியம் தொலைக்காட்சியில் உதவி செய்தி ஆசிரியராக
பணியில் சேர்ந்தேன், அங்குதான் முதன்முதலாக ஆங்கில செய்தியை மொழி பெயர்ப்பது, செய்தியாளர்களை
ஒருங்கிணைப்பது, டிக்கர் என்று அழைக்கப்படும் வரிச் செய்திகள் உள்ளிட்டவற்றை வழங்குவது
எப்படி என்று கற்றுக் கொண்டேன் அதற்கு காரணம், செய்தி ஆசிரியர் திரு.பாண்டியராஜனும்,
நிர்வாக ஆசிரியர் திரு.ஜெபக்குமாரும்தான்.
சத்தியம் தொலைக்காட்சி
தொடங்குவதற்கு முன்பிருந்து, 2 ஆண்டுகள் பணியில் இருந்த எனக்கு இறுதியாக எதிர்பாராத
விதமாக கிடைத்த வாய்ப்புதான் புதிய தலைமுறை செய்தியாளர் பணி. வழக்கமான பதற்றத்துடன்
நுழைந்த எனக்கு எப்படி மற்றவர்கள் மதிக்கும்படி ஆடை அணிய வேண்டும், மற்றவர்களிடம் எப்படி
பேச வேண்டும், எது செய்தி என்று புரிய வைத்ததும், நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்புகள்
வழங்கியதும் புதிய தலைமுறைதான். குறிப்பாக “ஷ்ரஹரிகோட்டா ராக்கெட் ஏவும் செய்திகள்”
இன்றுவரை அதுதான் எனக்கான அடையாளம். இயற்பியல் படித்து, ஒரு அறிவியலாளனாக ஷ்ரஹரிகோட்டாவிற்குள்
நுழைய விரும்பினேன், ஆனால் செய்தியாளனாகத்தான் நுழைய முடிந்தது. அதற்கு என்னை ஊக்கப்படுத்தியது
திரு.பீர் முகமது சார் அவர்கள்.
இதனையடுத்து புதிய
தலைமுறைக்காக கடந்த 2013-14 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட அனைத்து ராக்கெட் ஏவும் திட்டங்களையும்
அங்கிருந்து நான்தான் நேரலைச் செய்தியாக வழங்கினேன். அதிலும், மங்கள்யான் திட்டத்தின்
போது, ராக்கெட், செயற்கைக் கோள் ஆகியவற்றை சில அடிகள் தொலைவில் இருந்து பார்வையிட்டதும்,
ராக்கெட் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அங்கு நடக்கும் பணிகளை செய்தியாக வழங்கியதும்..
என்னால் மறக்க முடியாத நிகழ்வுகள். குறிப்பாக
PSLV C-20 SARAL ராக்கெட் ஏவும் போது ஏற்பட்ட தாமதம், மங்கள்யான் திட்டத்தின் சிறப்புத்
தகவல்கள், GSLV D-5 ராக்கெட்டில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு, அதற்குப் பிறகு மீண்டும்
அதை அனுப்பும் போது நி்ர்ணயித்த நேரத்தை விட ராக்கெட் விரைந்து சென்றது உள்ளிட்ட தகவல்களை
Exclusive & Breaking News களாக வழங்கியது எனக்கு பல விஞ்ஞானிகளை நண்பர்களாக பெற்றுத்
தந்தது.
இப்படி கடந்து
வந்த எனது ஊடகப் பாதையில் தற்போது ஒரு வேகத் தடை…… ஆம், பணியில் இருக்கும் போதே எனது
அப்பா இறந்துவிட்டதால் வாரிசு அடிப்படையில் “கிராம நிர்வாக அலுவலர்” பணி தற்போது கிடைத்துள்ளது.
எனக்கு வருவாய்துறையில் விருப்பம் இல்லாவிட்டாலும், அதுவும் மக்களுக்கான பணி என்பதால்
மீண்டும் எனது கிராமத்திற்கே செல்கிறேன். இவ்வளவு நாட்கள் எனது தவறுகளை சுட்டிக்காட்டி
என்னை மெருகேற்றிக் கொள்ளவும், என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அண்ணன் திரு.தியாகச்செம்மல்,
அவர்களுக்கும் மேலும், என்னோடு பணியாற்றிய
அனைத்து ஊடகத் தோழமைகளுக்கும் நன்றி….
நன்றியுடன்…
-கிறுக்கன்…
