Sunday, August 6, 2017

அழிவின் விளிம்பில் மனித இனம்


45°C அளவிற்கு இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்திருப்பது ஏதோ தற்காலிகமானது.... தற்செயல்... என்றால் நம்மை விட முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது... ஆம்
'புவி வெப்பமயமாவது அதிகரித்து வருவதால் 2100ல் வெப்ப அலை காரணமாக இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் மக்கள் உயிர் வாழ்வது கடினம்' என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லயோலா மேரிமவுன்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, ஜெரமி பால், எம்.ஐ.டி.,யின், எல்பாதிக் எல்டாஹிர், ஹாங்காங் பல்கலை பேராசிரியர் யுன் சுன் இம் ஆகியோர் இணைந்து நடத்திய பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில்
வெப்ப அலைகள் மற்றும் உயர் ஈரப்பத நிலைகள், 80 ஆண்டுகளில் அதிகரிக்கும். இந்தியா - கங்கை நதிப் படுகைகளில் அதிகம் வசிக்கும் விவசாய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்தியாவின் பெரும்பகுதி, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வசிப்பவர்கள் இந்த நுாற்றாண்டின் இறுதிக்குள் வெப்ப அலையை சந்திக்க நேரிடும்.
இந்தியா, தெற்காசிய மண்டலத்தில் வசிப்பவர்கள் 2100ல் அபாயகரமான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை உணரும் சூழல் பெருகிவருகிறது. இது இயற்கையின் மாற்றம் அல்ல... மனித தவறுகளால் ஏற்பட்டு வரும் அழிவின் அறிகுறி...
-கிறுக்கன்...
 

Saturday, November 1, 2014

வீண் வதந்தி வேண்டாமே...

வீண் வதந்தி வேண்டாமே...
250 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சூரியப் புயல் வீசப்போகிறது, இதனால் வரும் 16 ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு மிகப்பெரிய தூசிப் படலம் பூமியை சூழப் போவதாகவும் இதன் காரணமாக தொடர்ந்து இருள் ஏற்படும் என்று சமூக வலைத்தளங்களிலும், சில இணைய தளங்களிலும் செய்தி பரவி வருகிறது.
ஆனால் இது போன்ற நிகழ்வு நடைபெறவிருப்பதாக பரவிவரும் தகவல் முழுக்க முழுக்கப் பொய்...
சூரியனில் இருந்து வரும் கதிர்களும், சூரியப் புயலும் பூமியை நொடிக்கு நொடி கடந்து சென்றுகொண்டுதான் இருக்கின்றன, அதிலிருந்து நமது வளி மண்டலம் ஒரு போர்வை போல செயல்பட்டு நம்மை பாதுகாத்து வருகிறது. அதேபோல் 250 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சூரியப் புயலும் தற்போது நம்மை தாக்கவில்லை.
மேலும், தொடர்ந்து 6 நாட்களுக்கு இரவு ஏற்படும் என்ற செய்தியை நாசா உறுதி செய்ததாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் நாசா அந்த செய்தி வதந்தி என்று மட்டுமே விளக்கம் அளித்துள்ளது..
ஆனால் வலைத்தளங்களிலும், வாட்ஸ் அப் பிலும், ஒரு மாலை இரண்டு தமிழ் நாளிதழ்களிலும் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
தோழமைகளே.. ஒரு தகவல் கிடைத்தால் அது உண்மையா.. பொய்யா என்பதை உறுதிப்படுத்திவிட்டு பகிருங்கள் வீண் வதந்தி வேண்டாமே...
- கிறுக்கன்...
L

Friday, February 28, 2014

இனி, நான் வருவாய் துறையில்...

வணக்கம் தோழமைகளே... 
இதோ இன்றோடு முடிகிறது, எனது ஊடகப் பணி.. திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் நான். நான். 8 வது படிக்கும் போது தொடங்கியது எனது முதல் செய்திப் பணி, எங்களது கிராமத்தில் அவசர கதியில் போடப்பட்ட சாலைகளையும் அதன் விளைவுகளையும் பற்றி நான் எழுதிய அந்த செய்தி "தினமலரில்" வெளிவந்ததோடு, எனக்கு எனது வீட்டில் தர்ம அடி விழுவதற்கு காரணமாக அமைந்தது. ஆனால், அதற்குப் பின் 12 ஆம் வகுப்பு முடித்ததும், நான் மேற்கொண்டு படிக்க முடியாத நிலை, அதனால் குடும்ப சூழல் கருதி திண்டுக்கல்லில் இருந்த ஒரு உள்ளூர் தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்தேன், எனக்கு கவிதையும், தமிழில் பிழையின்றி எழுத தெரியும் என்பதற்காக எனது குருநாதர் "தினமலர் திரு.ஹரிஹரன்" அவருக்கு உதவியாளனாக வைத்துக் கொண்டார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக செய்தி என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டு அங்கேயே உதவி செய்தி ஆசிரியராக ஓராண்டு பணிபுரிந்தேன்.

இருந்தாலும் எனக்கு இயற்பியல் படிக்க வேண்டும் என்பது விருப்பம். எனவே பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப்படிப்பாக இயற்பியலை தேர்வு செய்து படித்துக் கொண்டிருந்தேன், ஆனால் ஊடகத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தினால் பழனியில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சியில் நானே செய்தியாளராக சேர்ந்து, வாரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரத்திற்கு செய்திகளை வழங்கி வந்தேன், எனது குடும்பத்தோடு, அதிகம் நெருக்கமில்லாத நாட்களான அப்போது தீபாவளி, பொங்கலுக்கு கூட வீட்டிற்குச் செல்லாமல், கல்லூரி விடுதி, செவன்த் சேனல் என்று கரைந்து கொண்டிருந்த எனக்கு பாலிமர் தொலைக்காட்சியின் பகுதி நேர செய்தியாளனாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

நானே சம்பாதித்து, நானே சமைத்து, என்னை நானே வளர்த்துக் கொண்டிருக்கும் வேளையில் கல்லூரி இறுதியாண்டும் முடிந்த பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை, இறுதியில் பாலிமர் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் திரு.கே.செல்வராஜிடம் சாரிடம் இருந்து அழைப்பு “ சென்னைக்கு வா “ என்று. இங்கும் செய்தியாளன்தான் என்று கிளம்பி வந்த எனக்கு கிடைத்தது என்னவோ, தொலைக்காட்சி ஒளிபரப்பு பிரிவு பொறியியலாளர் (Broadcasting Engineer) பணி. சரி பரவாயில்லை என்று அங்கே ஒரு ஆண்டு பணிபுரிந்துவிட்டு சத்தியம் தொலைக்காட்சியில் உதவி செய்தி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன், அங்குதான் முதன்முதலாக ஆங்கில செய்தியை மொழி பெயர்ப்பது, செய்தியாளர்களை ஒருங்கிணைப்பது, டிக்கர் என்று அழைக்கப்படும் வரிச் செய்திகள் உள்ளிட்டவற்றை வழங்குவது எப்படி என்று கற்றுக் கொண்டேன் அதற்கு காரணம், செய்தி ஆசிரியர் திரு.பாண்டியராஜனும், நிர்வாக ஆசிரியர் திரு.ஜெபக்குமாரும்தான்.

சத்தியம் தொலைக்காட்சி தொடங்குவதற்கு முன்பிருந்து, 2 ஆண்டுகள் பணியில் இருந்த எனக்கு இறுதியாக எதிர்பாராத விதமாக கிடைத்த வாய்ப்புதான் புதிய தலைமுறை செய்தியாளர் பணி. வழக்கமான பதற்றத்துடன் நுழைந்த எனக்கு எப்படி மற்றவர்கள் மதிக்கும்படி ஆடை அணிய வேண்டும், மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும், எது செய்தி என்று புரிய வைத்ததும், நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்புகள் வழங்கியதும் புதிய தலைமுறைதான். குறிப்பாக “ஷ்ரஹரிகோட்டா ராக்கெட் ஏவும் செய்திகள்” இன்றுவரை அதுதான் எனக்கான அடையாளம். இயற்பியல் படித்து, ஒரு அறிவியலாளனாக ஷ்ரஹரிகோட்டாவிற்குள் நுழைய விரும்பினேன், ஆனால் செய்தியாளனாகத்தான் நுழைய முடிந்தது. அதற்கு என்னை ஊக்கப்படுத்தியது திரு.பீர் முகமது சார் அவர்கள்.

இதனையடுத்து புதிய தலைமுறைக்காக கடந்த 2013-14 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட அனைத்து ராக்கெட் ஏவும் திட்டங்களையும் அங்கிருந்து நான்தான் நேரலைச் செய்தியாக வழங்கினேன். அதிலும், மங்கள்யான் திட்டத்தின் போது, ராக்கெட், செயற்கைக் கோள் ஆகியவற்றை சில அடிகள் தொலைவில் இருந்து பார்வையிட்டதும், ராக்கெட் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அங்கு நடக்கும் பணிகளை செய்தியாக வழங்கியதும்..  என்னால் மறக்க முடியாத நிகழ்வுகள். குறிப்பாக PSLV C-20 SARAL ராக்கெட் ஏவும் போது ஏற்பட்ட தாமதம், மங்கள்யான் திட்டத்தின் சிறப்புத் தகவல்கள், GSLV D-5 ராக்கெட்டில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு, அதற்குப் பிறகு மீண்டும் அதை அனுப்பும் போது நி்ர்ணயித்த நேரத்தை விட ராக்கெட் விரைந்து சென்றது உள்ளிட்ட தகவல்களை Exclusive & Breaking News களாக வழங்கியது எனக்கு பல விஞ்ஞானிகளை நண்பர்களாக பெற்றுத் தந்தது.

இப்படி கடந்து வந்த எனது ஊடகப் பாதையில் தற்போது ஒரு வேகத் தடை…… ஆம், பணியில் இருக்கும் போதே எனது அப்பா இறந்துவிட்டதால் வாரிசு அடிப்படையில் “கிராம நிர்வாக அலுவலர்” பணி தற்போது கிடைத்துள்ளது. எனக்கு வருவாய்துறையில் விருப்பம் இல்லாவிட்டாலும், அதுவும் மக்களுக்கான பணி என்பதால் மீண்டும் எனது கிராமத்திற்கே செல்கிறேன். இவ்வளவு நாட்கள் எனது தவறுகளை சுட்டிக்காட்டி என்னை மெருகேற்றிக் கொள்ளவும், என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அண்ணன் திரு.தியாகச்செம்மல், அவர்களுக்கும்  மேலும், என்னோடு பணியாற்றிய அனைத்து ஊடகத் தோழமைகளுக்கும் நன்றி….






நன்றியுடன்…

-கிறுக்கன்…

Friday, November 22, 2013

இன்றோடு ஓராண்டாகிறது..

இன்றோடு ஓராண்டாகிறது.. புதிய தலைமுறையில் சேர்ந்து...
பள்ளியிலும்... கல்லூரியிலும் அறிவியலை தேர்வு செய்து படித்த எனக்கு அப்போதெல்லாம் தெரியாது நான் முழு நேர ஊடகவியலாளனாக மாறுவேன் என்று.... எனது வாழ்வை வடிவமைத்ததில் எனது அப்பாவின் பங்கு அதிகம்... நாளிதழ், வார இதழ்களை வீட்டிற்கு வாங்கி வந்து பாடப் புத்தகங்களோடு அவற்றையும் வாசிக்க தூண்டியவர்..



நான் எட்டாவது படிக்கும் போது எனது கிராமத்தில் பாதியில் விட்டுபோன சாலை பணிகளை பற்றி " ஓட்டை டவுசருக்கு ஒட்டு " என்ற தலைப்பில் ஒரு செய்தியாக (?!) எழுதி தினமலர் நாளிதழுக்கு அனுப்பினேன்... அது இரண்டு தினங்களில் பிரசுரமும் ஆனது.. அப்போது எங்கள் கிராமத்தில் "கிராம உதவியாளராக" (வருவாய் துறை ) வேலை செய்துவந்த எனது அப்பாவிடம் ஊராட்சி மன்ற தலைவர் "கோர்த்து" விட அன்று எனக்கு சரியான "கச்சேரி " .

அன்று வாங்கிய அடி வலித்தாலும் பத்தாவது படிக்கும் போது சிறுவர்மலரில் எனது சிறுகதைகள் பிரசுரமாக அதுவே அடித்தளமாக அமைந்தது.. ஆனால் அப்போது வரை நான் என்னாவாகப் போகிறேன் என்ற கேள்விக்கு விடை தெரியாமலிருக்க "விண்வெளி அறிவியல் " தான் இனி என் வாழ்க்கை என்று முடிவெடுத்து, கல்லூரியில் இயற்பியல் பாடத்தை தேர்வு செய்து படித்தேன்.

அதற்கும் காரணம் எனது அப்பா.. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது எனக்கு 5 வயதிருக்கலாம்...மின்சார வசதியில்லாத ஓட்டு வீடு... கயிற்று கட்டிலில் என் அப்பாவுடன் வானத்தை பார்த்து படுத்திருக்கும் போது அவர் சொன்ன நட்சத்திர கதைகளும்.. நிலா ஏன் பூமியை சுற்றுகிறது என்று அவர் சொன்ன விளக்கமும்தான்....


எந்த பொருளாதார பின்னணியும் இல்லாத சூழலில் என்னையும் எனது அண்ணனையும். படிக்க வைத்த அவருக்கு பாரமாக இருக்க வேண்டாம் என்று 2006 இல் திண்டுக்கல்லில் இயங்கிவந்த உள்ளூர் தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்தேன்... அன்று தொடங்கிய இந்த ஊடகப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று புதிய தலைமுறையில் செய்தியாளராக வேலை செய்து வருகிறேன்.. இங்கு வந்தபிறகு நான் எட்டிய மகிழ்சிகரமான நாட்கள் நிறைய.. குறிப்பாக ஶ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆய்வு மைய பயணம்... இயற்பியல் படித்த நான் ஒரு விஞ்ஞானியாக (? :P) உள்ளே செல்ல நினைத்து ஒரு செய்தியாளனாக சென்றது... பலகட்ட பாதுகாப்பு அமைப்பு கொண்ட ராக்கெட் ஏவுதளம், ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு அறை ஆகிய இடங்களுக்குச் சென்றது.. இதுவரை 5 முறை அங்கு சென்றுவிட்டேன்.... பிறவிப்பயனையே அடைந்தவிட்டதைப் போன்ற மகிழ்ச்சி.. அதை என்னால் எழுத்துக்களால் விளக்க முடியவில்லை. அதேபோல், குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து ஒன்று காலாவதியாகியும் விற்பனையானதை அம்பலப்படுத்தியதை அடுத்து நாடு முழுவதும் அந்த மருந்திற்கு இடைக்கால தடைவிதித்தது மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம். இவையெல்லாம் எனக்கு மனதில் ஆழமான திருப்தியை ஒரு பக்கம் கொடுத்தாலும் எட்ட வேண்டிய தூரம் இன்னும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது எனது பேனா...


என் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட என் பெற்றோர் ,குருநாதர் "தினமலர் " ஹரிஹரன், மற்றும் என் வாழ்வோடு பிணைந்த அனைத்து தோழமைகளுக்கும்.. ஊடக நண்பர்களுக்கும்.. நன்றி...
எனது கனவுகளின் பயணம் தொடரும்....

Thursday, September 19, 2013

மரித்துப் போன மனிதநேயம்....



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களாக பார்வையற்ற பட்டதாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்... இதில்
பகுத்தறிவை அனைவரது நெஞ்சிலும் விதைத்த பெரியாரின் பிறந்தநாளான கடந்த 17 ஆம் தேதி, நடந்த நிகழ்வு மனித நேயம் என்ற ஒன்று இன்னும் இருக்கிறதா என்ற கேள்வியை என்னுள் எழுப்பிக் கொண்டிருக்கிறது... 

போராட்டத்தில் கைது செய்யப்பட்டால் பொதுவாக மண்டபங்களில் தங்க வைப்பது வழக்கம், விடுவிக்கப்படுவது அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் விடுவிக்கப்படுவர், ஆனால் முதல் நாள் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை விடுவித்த இடம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு சுடுகாட்டில்.. படுக்க வைத்த இடம் தகன மேடை.... 

இது ஒரு பக்கம் இருக்கும் போது, இரண்டாவது நாள் ஈ.வே.ரா சாலையில் பார்வையற்ற பட்டதாரிகள் மறியலில் ஈடுபட முயன்றனர் என்பதற்காக 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருவேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவற்றில் புதுப்பேட்டை சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் அனுபவித்தது மிகக் கொடுமை. காலை 10 மணிக்கு கைது செய்யப்பட்டு இரவு 10.30 வரை அடைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மதிய உணவும் கொடுக்கவில்லை.. இரவு உணவும் கொடுக்கவில்லை.. இதற்கும் மேலாக, விடுதலையானவர்களை அருகிலுள்ள பேருந்து நிலையம் அல்லது, ரயில்வே நிலையத்திற்கு கொண்டு சென்று இறக்கிவிட எந்த ஒரு வாகன வசதியும் செய்யாததால், பேருந்திற்காக அந்த கும்மிருட்டில், பார்வையற்றவர்கள் தெருத்தெருவாக அலைந்தது.."மனித நேயம்" என்ற ஒன்று இன்னும் இருக்கிறதா என்ற கேள்வியை என்னுள் எழுப்பிக் கொண்டிருக்கிறது... 



இது தொடர்பாக செய்தியாளன் என்ற போர்வை எனக்கு இருந்தாலும், சாதாரண மனிதனாக காவல் துணை ஆய்வாளரிடம் கேட்டதற்கு, அவர்களின் பதில், " அது எங்க டிவிஷன் கிடையாது சார்.. நான் இப்பதான் வந்தேன் " என்று கூறிக்கொண்டே, டீ கடைக்காரரிடம், "தம்பி டீ இன்னும் வரல" என்று நழுவிக்கொண்டார். இதற்கும் மேலான ஒரு கொடுமை.. அந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு சகோதரிகளிடம் தகாத முறையில் நடக்கவு முயற்சித்துள்ளதோடு, ஷூ போட்ட காலால் உதைத்துள்ளனர்.. காவல்துறையினருக்கு இவர்கள் மேல் என்ன பகை ? இவர்களும் இந்நாட்டு குடிமகன்கள்தானே.. இவர்களுக்கான உரிமைகளை கேட்கக்கூட உரிமை இல்லையா..?

-கிறுக்கன்...

Sunday, June 2, 2013

நினைவுகள்...


சொட்டுச்சொட்டாய் 
தூரும் வானம்....

தூரத்தில் நீ...

எட்டிப்பிடிக்க எனக்கும் ஆசைதான்.. 

முந்தி நிற்கும் உன் கோபத்தின் முன்பு ???

இருந்தாலும் வாரியணைத்தது.. 
என் நெஞ்சம்... 
வந்து நின்ற
உன் காதல் ததும்பும் நினைவுகளை....

-கிறுக்கன்...